தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.
நம்முடைய பாட்டி, தாத்தாக்கள் பெரிய சுனாமியை எதிர்த்து நின்று ஜெயித்தபோது, வாழ்க்கையில் ஒரு சிறு அலை இன்றைய தலைமுறையினரை ஏன் அடித்துச் செல்கிறது? உளவியல் ரீதியாக இதை 'Resilience' என்கிறோம். ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல் நாம் ஒவ்வொருவர் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது.
நவீன உலகில் பறக்கும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகப் பார்க்கிறோம். சந்தோஷமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா? நான் அழுதால் சாய்வதற்கு தோளும் இல்லை. என் பிரச்சனைளை கேட்பதற்கு செவியும் இல்லை. 'Blue Whale Challenge", "Momo Challenge" என்று குழந்தைகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறக்கிறார்கள். தகாத உறவுநிலைகள், போதை பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு உயர்கிறது.
குறிப்பாக 15-29 வயது உள்ளவர்கள் தற்கொலை முடிவு எடுப்பதற்கான காரணம் முன்பிருந்த வாழ்க்கைமுறை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. கூட்டுக் குடும்பம் உடைந்து சிறு குடும்பங்களாக மாறியது. மனிதர்களுடனான பழக்கம் இல்லாமல் மின்னணு சாதனங்களை பெரிதும் நம்பத் தொடங்கிவிட்டோம். எல்லாவற்றிற்கும் Mobile Phone, Electronic Gadgets என்று சார்பு இல்லாமல் கர்வத்தின் அடிப்படையில் மக்களிடம் விலகி, இன்னும் சொல்லப்போனால் நம்மிடமிருந்து நாமே விலகி இருக்கிறோம்.
இதனால் வெற்றி என்ற ஒன்று மட்டுமே இலக்காக இருக்கிறது. தோல்வியைப் பற்றி நாம் எண்ணி பார்க்காமல் இருக்கிறோம். பலரிடம் பேசும்போது எதிர்மறை சம்பவங்களைப் பற்றிய அனுபவம் கிடைக்கும். இழப்பு என்பதன் அர்த்தம் புரியும். ஆனால் இப்போது மனிதர்களுடனான தொடர்பு குறைந்தது இழப்பு என்ற ஒன்று பற்றின புரிதல் இல்லாமல் போனது. எனவே அது ஏற்படும்போது அதை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
தற்கொலை முயற்சிகள் அனைவருக்கும் ஒரே உந்துதலால் இயக்கப்படுவதில்லை. சிலருக்கு, நாள்பட்ட உணர்ச்சி அல்லது உடல் வலிக்கு தற்கொலை மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது. மற்ற நேரங்களில், ஒரு நபர் மனச்சோர்வு மற்றும் எதிர்மறை வாழ்க்கை நிகழ்வுகளை தீர்க்க முடியாமல் போகலாம். மற்றவர்களைப் பொறுத்தவரை, தற்கொலை முயற்சி மற்றவர்களுக்கு அவர்களின் கடுமையான துன்பங்களையும் அவர்களின் தேவையின் தீவிரத்தையும் தெரிவிக்கும் ஒரு வழியாக இருக்கலாம். அனைத்து தற்கொலை முயற்சிகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், மேலும் அந்த நபருக்கு பொருத்தமான உதவியை நாட வேண்டும்.
நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.
பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம்.
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள்.
உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
இதிலிருந்து விடுபட 4 விஷயங்கள் தேவை. அதில் சுயக்கட்டுபாடு மிக முக்கியமான ஒன்று. இரண்டாவது மற்றவர்களோடு எந்த இடற்பாடுகளும் இல்லாமல் பழகுவது. மூன்றாவது வாழ்க்கையின் மீதான நம்பிக்கை. நான்காவது சுய மதிப்பீடு. இவையே ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இதை தவிர்த்து அடுத்தவருக்காக வாழத் தொடங்கினால் நாம் நிம்மதியை இழப்போம். இதை ஒருவர் புரிந்து கொண்டாலே இந்த எதிர்மறை எண்ணங்களை கையாளலாம்
Counselling தொடர்பான செய்திகளை தினமும் உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.