Drug Addiction Awareness

மனிதர்கள் எல்லோருமே தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யத்தான் ஆசைப்படுவார்கள். அந்த ஆசை நல்லதா, கெட்டதா என்று பார்க்கவேண்டியது முக்கியம். போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தெரியாததால், இன்றைக்கு அது பலருக்கு விரும்பமான ஒன்றாகிவிட்டது. ஊட்டச்சத்துகள் எதுவுமற்ற போதைப் பொருளை உற்சாகம் தருவதாக, களைப்பையும் உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக நினைத்து அதனிடம் கட்டுண்டுகிடக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்.

பெற்றோர்கள்தாம் குழந்தைகளுக்கு அந்தக் கொடிய பழக்கத்தின் பாதிப்புகளை உணர்த்த வேண்டும். இல்லையென்றால், பல சிறார்கள், பதின் பருவத்தினர் இந்தப் பழக்கத்துக்குப் பலியாவதைத் தடுக்க முடியாது. ஆக, பெற்றோர்கள் போதைப் பழக்கத்தின் ஆபத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது ஒரு வகை நோய் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.


போதைப் பழக்கத்தைத் தூண்டும் காரணிகள்

1. ஆர்வம் (Curiosity)

சிகரெட், மது, கஞ்சாவைப் பற்றிப் பல பேர் சொல்லி, பல வகைகளில் கேள்விப்படும் தகவல்கள், பார்க்கும் நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறார்கள் இளைஞர்கள். `அதில் என்னதான் இருக்கிறது, பார்த்துவிட வேண்டும்’ என்ற ஆர்வ மிகுதியால், போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.


2. பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது (Learned Behavioural)

குடும்ப உறுப்பினர்கள், திரைப்பட ஹீரோக்கள், நண்பர்கள்... என மற்றவர்களைப் பார்த்து அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.


3. சுய விருப்பம்

போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் விளைவுகள் தெரியாமல், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், கொண்டாட்ட நிகழ்வுகளின் போதும் விரும்பி, போதையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.


4. புறக்கணிப்பு

குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக மகிழ்ச்சிக்காகப் போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் (Best Companion) கொள்கிறார்கள். தங்களுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.

இது போன்ற உட்புற, வெளிப்புறத் தூண்டல்களால் போதைப் பழக்கம் சிறார்களையும் பதின் பருவத்தினரையும் பற்றிக்கொள்கிறது.

பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும்.


2. போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்... இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.


3. பெற்றோர்களுடன் ஏற்கெனவே நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரெனச் சரியாகப் பேசாமல் இருந்தால், அவர்களின் பிரச்னைகளை அறிய முயல வேண்டும்.


4. பிள்ளைகளிடம் போதைப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் அவர்களைத் திட்டுவது, அடிப்பது, குற்றம் சாட்டுவது போன்ற அவர்களுக்கு வெறுப்பு உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகள் பலன் தராது. அவை அந்தப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மாறாக, அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற உதவ வேண்டும். உதாரணமாக, அக்கறையுடன் அறிவுரை சொல்ல வேண்டும். அதனால் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். அதை அவர்களே உணரும் வகையில் புரியவைக்க வேண்டும்.


5. பள்ளிகளில் தேவையற்ற விடுமுறை எடுப்பது, சக மாணவர்களுடன் சண்டையிட்டுக்கொள்வது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்களுக்கே சென்று தெரிந்துகொள்ள வேண்டும். போதைப்பழக்கம்கூட இவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.


பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் எது?

1. பெற்றோர்கள்தாம் பிள்ளைகளுக்கு முதல் ரோல் மாடல். எனவே, அவர்களுக்கு முன்பாக சிகரெட் பிடிப்பது, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


2. பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும்.


3. பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது, அவர்களுக்கு முன்பாகப் பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வது போன்றவையும் அவர்களின் மனதைப் பாதிக்கும். இதனால்கூட அவர்கள் தவறான நண்பர்களின் சேர்க்கையால் போதைப் பழக்கத்துக்கு ஆளாகலாம்.


4. சிறார்களும் இளைஞர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவும், அவர்களின் ஆர்வம் வேறு எந்தச் செயல்பாட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டும் அதில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.


By: நிமா மேத்யூ.


Counselling தொடர்பான செய்திகளை தினமும் உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.